திறைசேரியின் வெளிவளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம். ரங்க நிஷாந்த ராஜபக்சவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துகள் தமக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடந்த மே 6ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட அந்த முறைப்பாட்டில், தனது கணவரின் மரணம் தொடர்பில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர், அந்த மரணம் சந்தேகத்திற்குரியது என கூறிய கருத்துகளால் தானும் தனது பிள்ளைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், மன உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், உதய கம்மன்பில உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் பிரேத பரிசோதனை விசாரணைக்கு சாட்சிகளாக நீதிமன்றத்தில் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், உதய கம்மன்பிலவுக்கு மே 9ஆம் திகதி காலை 10.00 மணிக்கு குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது பக்கம் உள்ள ஆதாரங்களுடன் பொலிஸில் ஆஜராகவுள்ளதாக உதய கம்மன்பிலவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தற்போது பொலிஸாரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
