கனடாவின் ஸ்கார்பாரோ பகுதியில் தர்ஹாம் பிராந்திய போக்குவரத்து பேருந்திற்குள் வெறுப்புணர்வால் தூண்டப்பட்டு இஸ்லாமியப் பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 36 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டொராண்டோவைச் சேர்ந்த திருக்குமரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இவர் மீது தாக்குதல் மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டொராண்டோ பொலிஸாரின் செய்திக்குறிப்பு மற்றும் கனடா முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 13 அன்று புரோகிரஸ் அவென்யூ மற்றும் மில்னர் அவென்யூ பகுதியில் இப்பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பேருந்தில் பயணித்த ஹிஜாப் அணிந்த இஸ்லாமியப் பெண் ஒருவரை, சந்தேக நபரான திருக்குமரன் கந்தசாமி அணுகி அவதூறான மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களைக் கூறி வம்புக்கு இழுத்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்பெண்ணை “பயங்கரவாதி” என்று திட்டியதோடு, தகாத வார்த்தைகளால் கூச்சலிட்டு, திடீரென அவரை எட்டி உதைத்துவிட்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடியுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
