எந்தவொரு உண்மையையும் ஆராய்ந்து உணர்தல் அவசியமாகும்

எதனையும் வௌிப்புற அடையாளங்களையோ, அனுமானங்களையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்காது, அனுபவத்தின் மூலமும், நேரடியான உணர்தல் மூலமும் உண்மையை புரிந்துகொள்வோம் என்ற புத்த பகவானின் போதனையை மனதில் கொண்டு இந்த பொசன் பௌர்ணமி தினத்தை பக்திபூர்வமாக கொண்டாட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

பொசன் பௌர்ணமி தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை ஸ்தாபித்த மஹிந்த தேரரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதப் பணியை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினமானது, ஆன்மீக புரிதல், ஞானம் மற்றும் சமூக சமத்துவத்தை எமக்கு நினைவூட்டும் மிகவும் உன்னதமானதொரு நாளாகும். 

பொசன் பௌர்ணமி என்பது இலங்கை வரலாற்றில் ஒரு மதம்சார்ந்த நிகழ்வு மாத்திரமல்ல, ஒரு தேசத்தின் சிந்தனை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். 

மஹிந்த தேரரின் இலங்கை வருகையினால் இந்த நாட்டிற்குப் பரிசாகக் கிடைத்த பௌத்த தத்துவமானது, பல நூற்றாண்டுகளாக எமது தேசிய அடையாளத்தை வடிவமைத்துவரும் ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாக மாறியுள்ளது. 

உண்மையான அபிவிருத்தி மனிதனின் மனதிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பதை பொசன் பௌர்ணமி எமக்கு நினைவூட்டுகிறது. 

கருணை, இரக்கம், சமத்துவம், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு போன்ற உன்னதமான பௌத்த விழுமியங்களை சமூகத்தின் அடித்தளமாக மாற்றி அமைக்க முடியுமாயின், அமைதியான, நீதியான, சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதானது எமக்கு இலகுவானதாக அமையும். 

இன்று எமது நாடு புதிய எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு புதிய பாதையை அடைந்திருக்கின்றது. 

அந்தப் பயணத்தை வெற்றிகொள்ள பொருளாதார முன்னேற்றம் மாத்திரமல்லாது, ஒழுக்க விழுமியங்களால் செழுமைப்படுத்தப்பட்ட சமூகமும் அவசியமாகின்றது. 

பொசன் பௌர்ணமியின் உண்மையான சாரமாகிய ஒழுக்கம், அகிம்சை மற்றும் மனிதநேயம், ஆகியன மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நீதியான, சுபீட்சமான நாட்டை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் இலக்கினை அடைவதற்கான வழிகாட்டிகளாகும். 

மலர்ந்திருக்கும் இந்த உன்னதமான பொசன் பௌர்ணமி தினமானது, அனைத்து பௌத்த மக்களின் வாழ்விலும் அமைதி, நிம்மதி, அறிவு மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துகின்ற ஒரு புண்ணியகரமான நாளாக அமையட்டும் எனப் பிரார்த்திப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version