நல்லத்தண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி கடந்த 22ஆம் திகதி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்துள்ளார் என நல்லத்தண்ணிப் பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவி, கீழ் நல்லத்தண்ணி முர்ரே தோட்டத்தில் வசித்து வந்தவரும், மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியில் 8ஆம் வகுப்பு பயின்று வந்தவருமான செல்வம் திஷ்னா ஆவார்.
முச்சக்கரவண்டியின் ஓட்டுநரும், பின் இருக்கையில் பயணித்த அவரது உறவினரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவிகளும் ஒரு பாடசாலை மாணவனும் படுகாயமடைந்து, கண்டி போதனா வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நல்லத்தண்ணிப் பொலிசார், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைியல் சிகிச்சை பெற்று வந்த மாணவியின் சடலம் மீதான மரண விசாரணையின் பின்னர், உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
