எதிர்காலத்தில் எரிபொருள் மானியமா? அல்லது விலை திருத்தமா?

எதிர்காலத்தில் எரிபொருள் விலை தொடர்பான மானியம் வழங்குவது அல்லது விலை திருத்தம் செய்வது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். கடந்த நாட்களில் ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்தமையினால், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கடந்த வாரம் அனைத்து எரிபொருள் நிறுவனங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தலைவர் தெரிவித்தார். இதன்போது, அந்நிறுவனங்கள் தமக்கு ஏற்படும் நஷ்டம் குறித்து அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் கூறினார். அதன்படி, RM Parks நிறுவனம் ஒரு லீற்றர் டீசலுக்கு 173 ரூபாயும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 38.75 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், Sinopec நிறுவனம் ஒரு லீற்றர் டீசலுக்கு 192 ரூபாயும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 67 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. IOC நிறுவனம் ஒரு லீற்றர் டீசலுக்கு 136 ரூபாயும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 57 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு ஒரு தேசிய பொறுப்பு உள்ளபோதிலும், ஏனைய நிறுவனங்கள் வியாபார நோக்கில் செயற்படுவதனால், நஷ்டத்துடன் எரிபொருளை விற்பனை செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Exit mobile version