அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்

எதிர்வரும் ஆண்டு முதல் நாட்டின் வரி முறைமையை மேலும் எளிமையாகவும் இலகுவாகவும் மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிசாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் ஏனைய வரிகளை நீக்கி, படிப்படியாக வரிகளை எளிமைப்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் இத்தகைய எளிய வரி நடைமுறைகளே பின்பற்றப்படும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமையை (Paperless Customs Declaration) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். “அடுத்த ஆண்டில் எமது வரி முறைமையை மேலும் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் ஏனைய வரிகளை நீக்கி, படிப்படியாக வரிகளை எளிமைப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வோம். ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் இத்தகைய எளிய முறைகளே பின்பற்றப்படும். நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை இணைக்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும். அந்தப் பயணத்தின் ஒரு மைல்கல்லாகவே இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமையை நாம் பார்க்கிறோம்.” என்றார்.

Exit mobile version