இலங்கை வரும் முக்கிய நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு!

சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்வதாக தெரிவித்தள்ள சீன தரப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கை – சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு போலாந்து வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 பேர் கொண்ட உயர்மட்ட குழு எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் இந்த உயர்மட்ட குழு ஈடுபட உள்ளது.

வர்த்தகம், கடல் துறைமுகங்களுக்கு இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உட்பட பல்வேறு துறைகள் குறித்து போலாந்து வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளது.

Exit mobile version