கடந்த 24 மணி நேரத்தில் இராணுவ மோதல்கள் காரணமாக இலங்கையர்களிடையே எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
போர் சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் மேலும் மூன்று இலங்கையர்கள் நாளை (24) எய்லாட் நகருக்குச் சென்று, தாபா எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்தை அடைந்து, நாடு திரும்பவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
மேலும், 12 பேர் நாடு திரும்புவதற்காக நேற்று தூதரகத்திற்கு வந்ததாகவும், அவர்களை எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்குப் பயணிக்க விரும்புவோருக்காக, ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது டெல்லிக்கு சேவையில் ஈடுபடும் இந்தியன் எயார்லைன்ஸ் விமானங்களில் சில இருக்கைகளை இலங்கையர்களுக்கு வழங்குவதாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விமான சேவைகளின் ஊடாக நாடு திரும்புவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த விமானங்களின் ஊடாக நாட்டிற்கு வருகைதர விரும்புவோர், இன்றும் நாளையும் தூதரகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.