ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். அவுஸ்திரேலியா சென்ற இந்திய ‘ஏ’ அணியில் அவர் இடம் பெற்று இருந்தார்.
இதற்கிடையே யாஷ் தயாள் மீது பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளித்து இருந்தார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த அந்தப் பெண் முதல்-மந்திரியின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல் மூலம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் பெண் தனது புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்தேன்.
திருமணம் செய்வதாக கூறி பலமுறை செக்ஸ் தொந்தரவு கொடுத்தார். உடல் ரீதியாக நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் யாஷ் தயாள் அவரது குடும்பத்தினருக்கு தன்னை மருமகள் என்று அறிமுகப்படுத்தியதாகவும், இது அவரை முழுமையாக நம்ப வைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி இந்த புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெண் புகாரின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணைக்கு பிறகு இந்திய தண்டனை சட்டம் 69 ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி இருக்கிறது. ஏமாற்றுதல் அல்லது தவறான திருமண வாக்குறுதிகள் மூலம் பாலியல் செயல்களில் ஈடுபடுதல் பிரிவில் எப்.ஐ. ஆர். பதிவாகியுள்ளது.
இந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
யாஷ் தயாள் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூரு அணி கிண்ணத்தை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.