ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் தகுதியை இழக்குமா இலங்கை?

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் எதிர்வரும் 2028ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸில் 128 ஆண்டுகளின் பின்னர் கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. 

இருபதுக்கு 20 போட்டிகளாக இடம்பெறவுள்ள இந்த போட்டியில், ஆறு அணிகள் மாத்திரமே விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் பிராந்திய வலையங்களுக்கு இடையில் நடத்தப்படவுள்ள கிரிக்கெட் போட்டியில் ஆசிய கண்டத்தில் இருந்து இருபதுக்கு 20 தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள ஆடவர் இந்திய அணி மாத்திரமே தகுதிப் பெறுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. 

இதனடிப்படையில் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் 2028 இல் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியுஸிலாந்து ஆகிய முன்னணி அணிகள் தகுதிப்பெறும் வாய்ப்பை இழக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

ஓலிம்பிக்ஸிற்கு ஐந்து அணிகள் தகுதிப்பெறவுள்ளதுடன் ஆறாவது அணியாக, 2028 ஒலிம்பிக்ஸை நடத்தவுள்ள அமெரிக்கா நேரடி தகுதிப்பெறவுள்ளது. 

இந்தநடைமுறை தற்போது கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், பாகிஸ்தானும் தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளது. 

எவ்வாறாயினும், அணிகள் தகுதிப்பெறும் நடைமுறை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் குழு இதுவரை எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் வழங்கவில்லை என்பதுடன், அதனை இறுதி செய்யவுமில்லை. 

குறித்த நடைமுறை தொடர்பில் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகின்றது. 

சர்வதேச ஒலிம்பிக்ஸ் போட்டியில் 128 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version