அல்விஸ்வத்த படுகொலை: மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது

வத்தளை, ஹேக்கித்த, அல்விஸ்வத்த பகுதியில் ஜூலை 19 ஆம் திகதி இரவு இரண்டு மாடி வீட்டில் கூரிய ஆயுதங்களால் குத்தி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேலியகொடை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளின் சோதனையின்போது, இவர்களுடன் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு வாள்களும் கைப்பற்றப்பட்டன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தளை பொலிஸாரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும், இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அல்விஸ்வத்தவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 

கொலை நடந்தபோது, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்தனர். 

பொலிஸ் விசாரணையில், உயிரிழந்தவர் 2023ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உதவியவராகவும் உடந்தையாகவும் இருந்தவர் என தெரியவந்துள்ளது. 

இந்தக் கொலை, ‘வெல்லே சாரங்க’ என்ற பாதாள உலகக் கும்பலுக்கும் மற்றொரு குழுவிற்கும் இடையிலான மோதலின் விளைவாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் ‘வெல்லே சாரங்க’ கும்பலைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர், இந்தக் கொலை தொடர்பாக முகத்துவாரம் மற்றும் வத்தளையில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் கொழும்பு 15 மற்றும் வத்தளையைச் சேர்ந்த 17, 25 மற்றும் 27 வயதுடையவர்களாவர். 

இவர்களிடமிருந்து குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version