மொகடிஷு அருகே கென்ய விமானம் விபத்துக்குள்ளானது!

சோமாலியா தலைநகர் மொகடிஷுவின் தென்மேற்கே ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (SCAA) உறுதிப்படுத்தியுள்ளது.

5Y-RBA பதிவு எண் கொண்ட DHC-5D பஃபலோ விமானம், சனிக்கிழமை மாலை தலைநகரில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது.

சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிக்கையின்படி, உள்ளூர் நேரப்படி மாலை 5:43 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

ட்ரைடென்ட் ஏவியேஷன் லிமிடெட் இயக்கும் இந்த விமானம், டோப்லியில் இருந்து புறப்பட்டு, ஏடன் அப்துல்லே சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், மீட்பு குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை, எனினும், கூடுதல் தகவல்கள் வெளிவரும் போது விபத்து குறித்த புதுப்பித்த தகவல்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.

Exit mobile version