No products in the cart.
ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி
இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பது அமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றது முதல், பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்து வருகிறார். இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியையும் அவர் அறிவித்தார்.
முதலில் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அறிவித்தார். இந்தியா அதை ஏற்காததால், கூடுதலாக 25 சதவீத வரியை இந்தியா மீது விதித்தார். இதனால், இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை தீவிரம்: இதற்கிடையே, வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளார்.
அவருடன் வர்த்தகத் துறை சிறப்பு செயலர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் சென்றுள்ளனர். அமெரிக்க அரசின் வர்த்தகத் துறை அமைச்சருடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சாராத விவகாரங்கள் குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவினர் இந்த வார இறுதியில் இந்தியா திரும்ப உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.