No products in the cart.
சர்மா ஒலி வௌியிட்ட பரபரப்பு அறிக்கை
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு எதிராக கடந்த 08 ஆம் திகதி இல் வெடித்த இளைஞர்களின் போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாறி அந்நாட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது.
அடுத்த நாளே சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இது வழிவகுத்தது. அவரை தொடர்ந்து ஜனாதிபதியும் இராஜினாமா செய்தார்.
சர்மா ஒலி தற்போது காத்மாண்டுவின் வடக்கே உள்ள சிவுபுரி ராணுவ முகாமில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பதவி விலகிய பின் அவர் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியுள்ளார். அதில் தனது பதவி இழப்புக்கு இந்தியா மீதான தனது நிலைப்பாடே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் பிறந்ததை எதிர்த்ததால் தான் ஆட்சியை இழந்ததாகக் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா எல்லையில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளான லிபுலேக், காலாபனி மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்திற்கு சொந்தமானவை என்று தான் வலியுறுத்தியதும் தனது பதவி இழப்புக்கு ஒரு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவரது அறிக்கையில்,
“நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன். சமூக ஊடக நிறுவனங்கள் எங்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார், இந்தியாவில் அல்ல என்று நான் கூறினேன். இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே போராட்டக்காரர்கள் பல அமைச்சர்களின் வீடுகளுக்குத் தீ வைத்ததுடன், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அதிபர் மாளிகைகளையும் சூறையாடினர்.
வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 13,500 இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து தப்பி ஓடியதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.