No products in the cart.
கரூர் செல்கிறாரா விஜய்?
தமிழக வெற்றிக் கழக (தவெக) சார்பில் கடந்த 27 ஆம் திகதி கரூரில் நடந்த பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடந்த தினத்தன்று கரூரில் இருந்து திருச்சிக்கு வந்து அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்ற விஜய், சனிக்கிழமை இரவு 11.45 மணியளவில் தன்னுடைய வீட்டிற்குள் சென்றார். அன்று வீட்டுக்குள் சென்றவர் நேற்று (28) முழுவதும் வெளியே வரவில்லை.
இந்த நிலையில், இன்று (29) காலை வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார் விஜய். கரூர் சம்பவம் நடந்து 34 மணிநேரத்திற்கு பின் விஜய் வெளியே வந்துள்ள நிலையில், அவர் எங்கே செல்கிறார் என்பது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை.
அவர் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்துக்கு செல்வார் என கூறப்பட்ட நிலையில், அங்கு செல்லாமல் அவரது கார் பட்டினப்பாக்கம் நோக்கி சென்றுவருகிறது. பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு விஜய் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், அங்கு கரூர் செல்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கரூரில் 41 பேர் பலியான நிலையில், அவர்களை இதுவரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லாத விஜய், அறிக்கை வாயிலாக மட்டுமே தன்னுடைய இரங்கல் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட ஒரு உருக்கமான பதிவில், தனது இதயம் அனுபவித்த வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும், இறந்தவர்களின் முகங்கள் தன் மனதில் நிழலாடுவதாகவும் தவெக தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
“கற்பனைக்கு எட்டாத வகையில், கரூரில் நடந்ததை நினைக்கும்போது, என் மனமும் இதயமும் மிகுந்த பாரத்துடன் கனத்துள்ளது. நம் அன்புக்குரியவர்களை இழந்த பெரும் துயரத்தின் மத்தியில், என் இதயம் அனுபவிக்கும் வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என் கண்களும் மனமும் துயரத்தால் சூழப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புவதாகவும், சிகிச்சை பெறுபவர்களுக்கு கட்சியின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் விஜய் உறுதியளித்தார். “இது உண்மையில் நமக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. யார் ஆறுதல் சொன்னாலும், நம் அன்புக்குரியவர்களின் இழப்பு தாங்க முடியாதது. இருப்பினும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் வழங்க எண்ணுகிறேன். இந்தத் தொகை, இத்தகைய இழப்புக்கு முன் நிச்சயமாகப் பெரியதல்ல. ஆனாலும், இந்த நேரத்தில், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக, என் அன்புக்குரியவர்களே, கனத்த இதயத்துடன் உங்கள் அருகில் நிற்பது என் கடமை,” என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபா 10 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூபா 1 லட்சமும் இழப்பீடு அறிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.