No products in the cart.
அமெரிக்கா- உக்ரைன் Tomahawk ஏவுகணை ஒப்பந்தம்: ட்ரம்பை எச்சரிக்கும் புடின்
ரஷ்ய ஜனாதிபதி புடின், அமெரிக்கா உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கும் திட்டம் குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா தனது Tomahawk ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கும் பட்சத்தில் அது ரஷ்யா-அமெரிக்க உறவுகளில் புதிய கட்டமான பதற்றத்தை உருவாக்கும் என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் தீவிரமாக பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு சேதம் விளைவிக்கக்கூடியவை என்றாலும், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதற்கேற்ப விரைவில் தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை என புடின் கூறியுள்ளார்.
மேலும், போர்க்களத்தில் இது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், ரஷ்ய படைகள் மெதுவாக, ஆனால் நிலையாக முன்னேறிக்கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்ததற்காக புடின் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் நடைபெற்ற உச்சிமாநாடு பயனுள்ளதாக இருந்தது என்றும் ட்ரம்புடன் உரையாடுவதில் சௌகரியம் இருந்தது என்றும் அவர் கூறினார்.
மேலும், ரஷ்ய எண்ணெய் கப்பல்களை கைப்பற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்தால், அது கடல் சட்டங்களை மீறுவதாகும் என்றும், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் புடின் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கைகள், உலக அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்யும் வகையில் உள்ளன.