75 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், டங்கன் வைட் அவர்கள் வரலாற்றில் முதல்முறையாக இலங்கைக்கு பதக்கம் ஒன்றை ஈட்டித்தந்த பின்னர், தமது பாரம்பரியச் சிறப்பைக் கொண்டாடி மற்றும் எதிர்காலத் தலைமுறைகள் மத்தியில் அவற்றை எடுத்துச் செல்வதற்கான மேடையொன்றை எமது நாட்டிலுள்ள ஒலிம்பிக் வீரர்கள் தற்போது கொண்டுள்ளனர்.
புதுப்பொலிவு பெற்றுள்ள இலங்கை ஒலிம்பிக் வீரர்களுக்கான இணையத்தளமானது மாலபே SLIIT பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. SLIIT தனது 25 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியான இந்த இணையத்தளத்தை மேம்படுத்தி, அதற்கு புதுப்பொலிவை வழங்கியுள்ளது. https://olympians.lk/ மூலமாக அணுகக்கூடிய இந்த இணையத்தளம், 1948 முதல் இது வரை ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டுள்ள இலங்கை வீரர்கள் அனைவரதும் விபரங்களை உள்ளடக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மேடையாகத் திகழ்கின்றது.
ஒலிம்பிக் போட்டிகளில் இது வரை 107 இலங்கை வீரர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். அவர்களில் சுமார் 30 பேர் துரதிர்ஷ்டவசமாக தற்போது நம்மத்தியில் இல்லை. 50 வரையான ஒலிம்பிக் வீரர்கள் இலங்கையில் வசிப்பதுடன், சுமார் 27 பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இலங்கைக்கு சர்வதேச புகழை ஈட்டித்தந்த இந்த வீரர்கள் தமது வரலாறுகளைப் பேணிப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிப்பதற்கான நிரந்தரமான மேடையொன்றைக் கொண்டிருப்பதற்கு உண்மையில் தகுதி உடையவர்கள். வீரர்களின் விபரங்கள், தகவல்கள், மற்றும் சிறப்புக்களை சமூகத்திற்கு எட்டச் செய்யும் வகையில் இந்த இணையத்தளமானது மேற்குறிப்பிட்ட நோக்கத்தைத் தீர்த்து வைக்கின்றது.
எனினும் இது சுலபமாக அமைந்து விடவில்லை, பல சவால்கள் நிறைந்தது. இலங்கை ஒலிம்பிக் வீரர்கள் சிலர் ஒன்றுகூடிய அமர்வுகளின் போது டிஜிட்டல் பிரசன்னத்திற்கான தேவை உள்ளமையை அவர்கள் முதலில் 2012 ம் ஆண்டிலும், பின்னர் 2016 ம் ஆண்டிலும் கலந்துரையாடியதுடன், இந்த மேடைக்கான திட்டமும் அவ்வாறாகவே உதித்தது. ஆரம்பத்தில் இது மிகவும் உற்சாகத்துடன் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இச்செயற்திட்டத்தை ஆரம்பிப்பது பாரிய திண்டாட்டமாகவே காணப்பட்டது. 2017 ஜுலை 15 அன்று சர்வதேச ஒலிம்பிக் வீரர்கள் சங்கத்தில் (World Olympians Association – WOA) இலங்கை உத்தியோகபூர்வமாகப் பதிவை மேற்கொண்டதைத் தொடர்ந்தே இந்த எண்ணக்கரு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலைப் பெற்றுக்கொண்டது. WOA மூலமாக இதில் பங்குபற்றும் வீரர்கள் அனைவருக்கும் தமது பெயருடன் OLY என்ற கௌரவ தகுதியைச் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியதுடன், ஒலிம்பிக் விழுமியங்களை ஊக்குவிப்பதில் அவர்களுடைய வகிபாகத்தை இது அங்கீகரிக்கின்றது. WOA ல் இணைந்த 148 வது நாடாக இலங்கை மாறியதுடன், தற்போது 158 நாடுகள் உறுப்பு நாடுகளாக இச்சர்வதேச சமூகத்தில் இணைந்துள்ளன.
ஒலிம்பிக் வீரர்களான சிறியானி குலவன்ச, ஜுலியன் போலிங், தமயந்தி தர்ஷா, சுசந்திகா ஜெயசிங்க, தம்மிகா மெனிக்கே, மஞ்சுள குமார, மற்றும் பலர் அடங்கிய அர்ப்பணிப்புடைய வீரர்கள் அணி இந்த எண்ணக்கருவுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக கிரமமான அடிப்படையில் சந்திப்புக்களை மேற்கொண்டனர். வெறுமனே பெயர் விபரக்கொத்து என்பதற்கும் அப்பால் சிறப்பானதாக இதனை உருவாக்குவதற்கு அவர்கள் கனவு கண்டனர். ஒலிம்பிக் வீரர்களின் நலன்களுக்கு ஆதரவளித்து, கனிஷ்ட வீரர்களுக்கு வழிகாட்டி, மற்றும் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் அவர்களை எட்டும் செயல்பாடுகள் மூலமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விழுமியங்களை அறிமுகப்படுத்துவதே இத்தளத்தை தோற்றுவிப்பதில் அவர்களுடைய நோக்கமாகக் காணப்பட்டது.
இந்த இணையத்தளமானது டிஜிட்டல் ஆவணக்காப்பகம் மற்றும் சமூக மேடையாக ஆகிய இரண்டாகவும் செயல்படுகிறது. பாடசாலைகளுக்கான உத்வேகமளிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள், வீரர்களின் ஈடுபாட்டை வளர்க்கும் முயற்சிகள், மற்றும் பாரம்பரியம் மற்றும் நிலைபேற்றின் அடையாளமாக, ஒவ்வொரு ஒலிம்பிக் வீரரையும் கௌரவிக்கும் வகையில் அவர்களுடைய பெயரில் மரங்களை வளர்ப்பதற்கான மரநடுகைத் திட்டம் போன்றவற்றை இத்தளம் கொண்டுள்ளது.
இதில் SLIIT ஐ உள்வாங்கும் முன்மொழிவு இலங்கை ஒலிம்பிக் வீரர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் சிறியானி குலவன்ச அவர்களாலேயே கொண்டு வரப்பட்டது. SLIIT விளையாட்டு விருதுகள் வைபவத்தில் கலந்து சிறப்பித்த அவர், SLIIT துணை வேந்தர் பேராசிரியர் லலித் கமகே அவர்களுடன் இது குறித்த எண்ணக்கருவை அவர் பகிர்ந்து கொண்டார்.
“பேராசிரியர் கமகே அவர்களிடம் இது தொடர்பில் நான் வேண்டுகோளை முதலில் முன்வைத்த சமயத்தில், அவர் ஒரு நொடியும் சிந்திக்காது இதற்கு உடனடியாகவே முன்வந்தார்,” என்று அவர் குறிப்பிட்டார். “விளையாட்டின் மீது தீவிர ஆர்வமும், ஆதரவும் கொண்ட பேராசிரியர் கமகே அவர்கள், இம்முயற்சியின் மதிப்பை உடனடியாகவே விளங்கிக் கொண்டு அதனை ஏற்றார். சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்ற சந்திப்புக்கள் மற்றும் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இக்கனவை நனவாக்குவதற்கு SLIIT எமக்கு உதவியுள்ளது. ஒலிம்பிக் வீரர்கள் தேசிய அருஞ்சொத்து என்பதுடன், அவர்களுடைய சாதனைகள் நினைவுகூரப்பட்டு, அவர்களுடைய அனுபவங்கள் அடுத்து வரும் சந்ததிகள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதை இந்த இணையத்தளம் உறுதிசெய்கின்றது.”
ஒலிம்பிக் வீரர்களான சுகத் திலகரத்ன (பிரதி விளையாட்டுக்கள் அமைச்சர்), சிறியானி குலவன்ச (இலங்கை ஒலிம்பிக் வீரர்கள் சங்கத்தின் தலைவர்), சுனில் குணவர்த்தன, ருவினி அபேமான்ன, மகேஷ் பெரேரா, கே.ரீ.என். பெரேரா, நிம்மி டி சொய்சா, அனுருத்த ரத்நாயக்க, மற்றும் நிலுகா ராஜசேகர உள்ளிட்ட மதிப்பிற்குரிய விருந்தினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். பேராசிரியர் லக்ஷ்மன் ரத்நாயக்க (வேந்தர்/தலைவர்); பேராசிரியர் லலித் கமகே, முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, மற்றும் துணைவேந்தர்; பேராசிரியர் நிமல் ராஜபக்ச, சிரேஷ்ட பிரதி துணைவேந்தர் மற்றும் துறைத் தலைவர்; திரு. உதித கமகே, ரண்மினி உனந்தென்ன, றொஷானி மதரசிங்க, திரு. துஷார பிரியங்க, திரு. திமிர பெரேரா, திரு. சுரேஷ் ரத்நாயக்க, மற்றும் தனுஷி சிறிவர்த்தன உள்ளிட்ட சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகள் மற்றும் குழுவினர் SLIIT ன் பிரதிநிதிகளாகக் கலந்து சிறப்பித்துள்ளனர்.
SLIIT மாணவர்களின் விளையாட்டுப் பண்புகள் மற்றும் துடிதுடிப்பான உற்சாக உணர்வைக் காண்பிக்கும் வகையில் மிகவும் திறமையான தேசிய விளையாட்டு வீரர்கள் பலரும் இந்நிகழ்வில் இணைந்து அதனை சிறப்பித்துள்ளனர். செல்வி கோஷிலா அமரசிங்க (தேசிய விளையாட்டு வீரர் மற்றும் மகளிருக்கான உயரம் பாய்தலில் தற்போது தேசிய மட்டத்தில் முதலிடம்), செல்வி கலினா பஸ்நாயக்க (தேசிய விளையாட்டு வீரர் மற்றும் சர்வதேச பதக்கம் – பரா நீச்சலில் வெற்றி), செல்வி நெதங்கா குணரத்ன (தேசிய விளையாட்டு வீரர் மற்றும் இலங்கை தேசிய இளையோர் வலைப்பந்தாட்ட அணி வீரர்), திரு. செனத் ராஜபக்ச (தேசிய மட்ட கரம் வீரர்), மற்றும் திரு. செஹான் வீரசிங்க (தேசிய சதுரங்க வீரர்) ஆகியோரும் அவர்களில் அடங்கியிருந்தனர். பேராசிரியர் லலித் கமகே அவர்கள் இந்நிகழ்வில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “புதுப்பொலிவு பெற்றுள்ள இலங்கை ஒலிம்பிக் வீரர்களின் இணையத்தளத்தை அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். இலங்கையில் விளையாட்டுத் துறையை வலுப்படுத்தி, எமது வீரர்களின் சாதனைகளை மகத்தான அளவில் பிரபலப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானதொரு படியென நான் நம்புகின்றேன். முன்பு விளையாட்டில் ஈடுபட்ட ஒருவர் என்ற வகையில் கல்வியையும், விளையாட்டையும் சமமாக முன்னெடுத்துச் செல்வது எவ்வளவு சவால் என்பதை நான் நன்கறிவேன். இலங்கையில் வியக்கவைக்கும் திறமைசாலிகள் பலர் உள்ளனர். எனினும் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் தரத்தை எட்டுவதற்கு உதவ முறையான வளங்கள் மற்றும் பொருளாதார உதவிகள் போதியளவில் கிடைக்காமையே மிகப் பாரிய சவால்களாகக் காணப்படுகின்றன.
SLIIT ல் நாம் வித்தியாசமாக சிந்திக்கின்றோம். கல்வி என்பது வெறும் புத்தகப் படிப்பு என்பதற்கு அப்பாற்பட்டது என நாம் எப்போதும் நம்புகிறோம். நாம் 22 வகையான விளையாட்டுக்களை வழங்குவதுடன், திறன்கள் மற்றும் பண்பு ஆகிய இரண்டிலும் வளர்ச்சி காண உதவுவதற்காக இவற்றில் ஈடுபடுவதற்கு எமது மாணவர்கள் அனைவரையும் நாம் ஊக்கப்படுத்துகிறோம். அதனாலேயே எமது பட்டதாரிகள் சகலகலாவல்லவர்களாக வெளிவருதுடன், தொழில்துறையில் வலுவாக முத்திரை பதிக்கின்றனர்.”
அவர் தொடர்ந்தும் கூறுகையில், “மாணவர் ஒருவர் திறமைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவராகத் தென்பட்டால், பாடசாலை மட்டத்தில் கூட உதவ நாம் தயாராகவுள்ளோம். உலகிலுள்ள ஏனைய உச்ச பல்கலைக்கழகங்களைப் போலவே, ஒலிம்பிக் தரத்தை எட்டுவதற்கு தேவையான அனைத்து வழிகாட்டல், புலமைப்பரிசில்கள், மற்றும் பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு உதவுவதற்கு நாம் எப்போதும் முன்வருகிறோம். இந்த இணையத்தளம் புதுப்பொலிவு பெற ஆதரவளித்துள்ளமை அத்தகைய நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளில் ஒன்றாகும். எமது விளையாட்டு வீரர்கள் மற்றும் நாட்டிற்கு மகத்தான நன்மையை நோக்கிய முதலாவது படியாக இது காணப்படுகிறது.”
எமது இலங்கைப் பொக்கிஷங்களுக்கு டிஜிட்டல் இல்லம் இலங்கை ஒலிம்பிக் வீரர்களுக்கான இணையத்தளத்திற்கு SLIIT புதுப்பொலிவு அளித்துள்ளது
