No products in the cart.
முன்ஜாமீன் பெற்று தப்பியது எப்படி?
ஐடி ஊழியரை தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு, கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை தப்பியது எப்படி?
கடந்த ஆகஸ்ட் மாதம் கொச்சியில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட இந்த தகராறு காரணமாக, நடிகை லட்சுமி மேனன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் கைதான நிலையில், நடிகை மட்டும் தலைமறைவானார்.
தாக்குதலுக்கு உள்ளானவர் சமாதானம் ஆகி நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததால், லட்சுமி மேனனுக்கு ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. நடந்தது என்ன?
சுந்தரபாண்டியன், கும்கி, பாண்டியநாடு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில், தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் லட்சுமி மேனன். மலையாள படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர், கோலிவுட் சினிமாவில் ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்ளிட் படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டுக்குப் பின் பெரிய அளவில் படங்களில் நடிக்காதவர், தனது சொந்த ஊரான கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் செட்டில் ஆகியுள்ளார்.
இவர், கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி இரவில் கொச்சியில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். நண்பர்கள் மற்றும் தோழியுடன் சென்ற போது, அதே கேளிக்கை விடுதிக்கு ஐ.டி. ஊழியரான ஷா சலீம் என்பவர் வந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக லட்சுமி மேனனின் நண்பர்களுக்கும், ஷா சலீமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்து சென்ற ஷா சலீமை, காரில் துரத்திச் சென்றும் தாக்கியதாக கூறப்பட்டது.
அத்துடன், அவரை காரில் கடத்தி தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் லட்சுமி மேனன் உட்பட 4 பேர் மீதும், தாக்குதல், கடத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், நடிகை உடன் சென்ற அனீஷ், மிதுன், சோனாமோல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், தலைமறைவான லட்சுமி மேனன் தரப்பில், முன்ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தாக்குதலுக்கு உள்ளான ஐ.டி. ஊழியர் இரு தரப்பினரிடையே சமாதான பேச்சு நடத்தி, சுமூக தீர்வு எட்டப்பட்டதாக கூறினார். எனவே, நடிகைக்கு முன்ஜாமின் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பிரமாணப்பத்திரமும் தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில் லட்சுமி மேனனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். கேளிக்கை விடுத்தியில் ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கில் நடிகை லட்சுமி மேனன் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியதால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.