No products in the cart.
பீகார் மாநிலத்தின் இறைச்சிக் கடைகளுக்குத் தடை!
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் இறைச்சிக் கடைகள் இயங்குவதற்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.
சிறுவர்களின் மனநலன் மற்றும் பொது இடங்களின் புனிதத்தைப் பேணும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பீகார் துணை முதலமைச்சர், பாடசாலைகளுக்கு அருகில் இறைச்சிக் கடைகள் திறந்தவெளியில் இயங்குவது சிறுவர்களிடையே வன்முறைப் போக்கை உருவாக்கும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிறு வயதிலேயே இத்தகைய காட்சிகளைப் பார்ப்பது அவர்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடும் என்பதால், அதனைத் தடுக்கும் பொருட்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
அத்துடன், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்கு அருகில் இறைச்சி மற்றும் மீன்களைத் திறந்தவெளியில் விற்பனை செய்வது பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதுடன், அந்த இடங்களின் புனிதத்தையும் சீர்குலைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், சுகாதாரம் மற்றும் அமைதியான கல்விச் சூழலை உறுதிப்படுத்தும் வகையில், இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசு எச்சரித்துள்ளது.
















