No products in the cart.
ஹார்முஸ் அச்சம் முதல் பங்கு சரிவு வரை – உலக பொருளாதாரம் அழுத்தத்தில்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் பிராந்திய பாதுகாப்பை தாண்டி, உலகளாவிய பொருளாதாரத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க நோக்கங்கள் நிறைவேறும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் தெஹ்ரானை இலக்கு வைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா தளங்களும் தாக்கப்பட்டுள்ளன. பெய்ரூட் நகரின் தெற்கு பகுதிகளில் பல வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
ஹார்முஸ் தடைகள் எண்ணெய் சந்தையை அச்சுறுத்துகின்றன
உலக எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி ஊடான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து பதற்றத்தில் உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த கப்பலில் 15 இந்திய ஊழியர்கள் இருந்த சூழலில், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உலகில் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு சுமார் 20% முதல் 25% வீதம் வரை இந்த பாதையே பயன்படுத்துகிறது.
நீர்வழி அதிகாரப்பூர்வமாக மூடப்படவில்லை என்றாலும், டேங்கர் கப்பல்கள் அச்சத்தால் நிறுத்தப்படுகின்றன. காப்பீட்டு கட்டண உயர்வு மற்றும் தாக்குதல் அச்சம் காரணமாக போக்குவரத்து தாமதமடைகிறது.
இந்த வழியாக தினமும் சுமார் 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் அனுப்படுகிறது. இந்த நீரிணையில் போக்குவரத்து தடை ஏற்பட்டால், உலகளாவிய எண்ணெய் விலை மேலும் வேகமாக உயரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை (Brent Crude) 09 வீதம் உயர்ந்து பீப்பாயொன்று 79.30 அமெரிக்க டொலராக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அது 82 டொலரையும் எட்டியது.
அதேபோன்று, அமெரிக்க அளவுகோலான WTI ரக கச்சா எண்ணெய் 6.2% உயர்ந்து 71.17 டொலராக பதிவாகியுள்ளது.















