No products in the cart.
பிராம்ப்டனில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் பலி
பிராம்ப்டனில் இடம்பெற்ற பயங்கர கார் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏர்போர்ட் சாலையில் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் (SUV), வில்லியம்ஸ் பார்க்வேக்கு சற்று வடக்கே ஒரு சரக்கு லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மதியம் 3:30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் கார் லாரியின் அடியில் சிக்கியதில், அதில் பயணம் செய்த ஆண் ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஆகிய இருவரையும் மீட்புக்குழுவினர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் காரை வெட்டி எடுத்து மீட்டனர்.
படுகாயமடைந்த ஆண் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த பெண் ஹெலிகாப்டர் மூலம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரி மந்தீப் கத்ரா, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆரம்பகட்ட தகவல்களின்படி அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அல்லது தகவல்கள் வைத்திருப்போர் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.















