கனடா

கனடாவில் சொந்த வீடு வாங்குவதில் சாதனை படைக்கும் புதிய குடியேறிகள்

 கனடாவிற்கு அண்மைய காலங்களில் புலம்பெயர்ந்த புதிய குடியேறிகள் மத்தியில் சொந்தமாக வீடு வாங்கும் வீதம் கணிசமாக அதிகரித்து வருவதாக கனடா புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டில் பிறந்த கனடியர்கள் மத்தியில் வீட்டுரிமை வீதம் வீழ்ச்சியடைந்து வரும் அதேவேளை, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் புதிய குடியேற்றவாசிகளின் வீட்டுரிமை வீதம் கணிசமாக உயர்வடைந்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2017 முதல் 2021 வரையான காலப்பகுதியில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று கனடாவிற்கு வந்தவர்கள், அங்கு கால்பதித்த முதல் ஐந்து வருடங்களில் வீட்டுச் சந்தைக்குள் எவ்வாறு நுழைந்துள்ளனர் என்பது ஆராயப்பட்டுள்ளது.

கனடாவின் ஏழு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, வீடுகளின் விலையேற்றம் மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், முந்தைய காலப்பகுதிகளுடன் ஒப்பிடும் போது புதிய குடியேற்றவாசிகள் மிக விரைவாக வீட்டுச் சந்தைக்குள் நுழைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உதாரணமாக ஒன்டாரியோ மாகாணத்தில் குடியேறி ஐந்து வருடங்களை நிறைவு செய்த புதிய குடியேற்றவாசிகளின் வீட்டுரிமை வீதம் 2018இல் 35.7 வீதமாக இருந்த நிலையில், அது 2021இல் 40.2 வீதமாக உயர்வடைந்துள்ளது.

ஆனால், இதே காலப்பகுதியில் 25 முதல் 54 வயதுக்குட்பட்ட கனடாவில் பிறந்த உள்நாட்டு மக்களின் வீட்டுரிமை வீதம் 50.7 வீதத்திலிருந்து 47.8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கனடாவில் வசிக்கும் கால அளவே சொந்த வீடு வாங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

குடியேற்றவாசிகள் ஆரம்பத்தில் வாடகை வீடுகளில் வசித்து, தங்களின் கடன் வரலாற்றை கட்டியெழுப்புவதுடன், வருமானத்தை அதிகரித்துக் கொண்ட பின்னரே வீடுகளைக் கொள்வனவு செய்கின்றனர். குடியேற்றப் பிரிவுகள் மற்றும் அவர்கள் பிறந்த நாடுகளின் அடிப்படையிலும் இந்த வீட்டுரிமை முறைகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

பொருளாதாரப் பிரிவு குடியேற்றவாசிகள் அதிகளவில் வீடுகளை வாங்கியுள்ளதுடன், அடுத்தபடியாக குடும்ப அனுசரணை மூலம் வந்தவர்களும், ஆகக் குறைந்த மட்டத்தில் அகதிகளாக வந்தவர்களும் உள்ளனர். பிராந்திய ரீதியாகப் பார்க்கும் போது, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வந்த குடியேற்றவாசிகளே ஒன்டாரியோ, அல்பர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் அதிகளவில் வீடுகளை வாங்கியுள்ளனர். 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…