இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அந்தச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமையவே அவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சியின் பல அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளிடமிருந்து எழுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், மேல் நீதிமன்ற நீதியசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்குரிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது. 

அதற்கமைய, அதற்குரிய 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. 

இவ்வாறான பின்னணியில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் யோசனை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது நிலைப்பாட்டை அண்மையில் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் அறிவித்திருந்தது. 

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடனான சந்திப்பின் போதும், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. 

அதற்கமைய, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இந்தக் கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.

Exit mobile version