No products in the cart.
இஸ்ரேல் தாக்குதலில் IRGC தளபதி பலி
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் தொடரில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்துள்ளார்.
ஈரானிய ஊடகங்கள் பலவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவாகக் கருதப்படும் ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர படையின் தலைமையகம் ஆகும்.
மேலும், ஈரானிய இராணுவத் தலைவர் மொஹமட் பாகெரி உள்ளிட்ட இராணுவத் தலைவர்களும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் பலரும் இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை ‘எதிரி முடக்கும் தாக்குதல்கள்’ என பெயரிட்டுள்ளது.
IAF ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டது.
தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தேவையான எந்த நேரமும் ஈரானை தாக்குவது தமது திட்டமென வலியுறுத்தியுள்ளார்.
இது முதல் தாக்குதல் மட்டுமே எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பது மற்றும் அதன் மூலம் தமது மக்களைப் பாதுகாப்பது இந்தத் தாக்குதலின் நோக்கம் என நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரான் தற்போது தனது வான்வெளி எல்லையை மூடியுள்ளது.
இந்நிலையில், “டஜன் கணக்கான இலக்குகள்” தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் உயர்மட்ட இராணுவத் தலைவர்களும் அணு விஞ்ஞானிகளும் அடங்குவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.