No products in the cart.
கீதா கோபிநாத் இன்று இலங்கை விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று (15) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டிற்கு வருகை தர உள்ளார்.
தனது விஜயத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது: கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் 2025 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் உள்ள அனுபவங்கள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம் மற்றும் வரவிருக்கும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய உறவு குறித்து இலங்கை அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவும், பிற முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கிறார்.
2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றும் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த விஜயம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.