இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் சதம் அடித்து வெளியேறியப் பிறகு, அணித்தலைவர் ஷுப்மன் கில்லும் சதம் அடித்தார். இதனால், இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில், 359 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
ஐசிசி விதிமுறையை:
இப்போட்டியில், இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில், ஐசிசி விதிமுறையை மீறியிருப்பதாக, விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, ஆடை விடயத்தில் வெள்ளை, கிரீம் நிறம் ஆகிய நிறங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில், கருப்பு நிற சாக்ஸை அணிந்து விளையாடினார். இது, அப்படியே தௌிவாக தெரிந்தது. ஐசிசி விதிமுறைப்படி, செக்ஷன் 19.45 விதியின் படி, வெள்ளை, கிரீம் நிறம், க்ரே நிற சாக்ஸ் மட்டுமே அணிய வேண்டும்.
என்ன தண்டனை?
ஷுப்மன் கில்லுக்கு, இது நிலை 1 குற்றம்தான். இதனால், போட்டி மத்தியஸ்தர் ரிச்சி ரிச்சர்ட்சன், கில்லுக்கு, போட்டி கட்டணத்தில் இருந்து அதிகபட்சமாக 20 சதவீத தொகையை மட்டுமே வசூலிப்பார்கள்.
ஒருவேளை, இது ஏனைய நாட்களிலும் தொடர்ந்தால், பெரிய குற்றமாக பார்க்கப்படும். அதாவது, நிலை 2 குற்றமாக கருதப்பட்டு, போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீத தொகையை அபராதமாக வசூலித்துவிட்டு, ஒரு டிமெரிட் புள்ளிகளை பெறவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை, இந்த தண்டனை விதிக்கப்பட்டப் பிறகும், ஷுப்மன் கில் தொடர்ந்து கருப்பு நிற சாக்ஸை அணியும் பட்சத்தில், 2 டிமெரிட் புள்ளிகளை வழங்கி, ஒரு போட்டியில் தடை செய்யப்படுவார்.
எப்படி தப்பிப்பது?
ஷுப்மன் கில், இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரு வழி இருக்கிறது. ‘விதிமுறை எனக்கு தெரியாது அல்லது தெரியாமல் கருப்பு நிற சாக்ஸை அணிந்துவிட்டேன்’ என போட்டி மத்தியஸ்தரிடம் கில், எழுத்துபூர்வமாக கடிதம் வழங்க வேண்டும். மேலும், தெரியாமல் இந்த சாக்ஸை அணிந்துவிட்டதால், முதல் போட்டிக்கு மட்டும் இதனை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும். ஒருவேளை, நடுவர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், இரண்டாவது நாளில் இருந்தே கில், தனது சாக்ஸை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தேவையில்லாத சர்ச்சை:
புதிதாக இந்திய டெஸ்ட் அணிக்கு தலைவராக பொறுப்பேற்றுள்ள ஷுப்மன் கில்லுக்கு, இது தேவையில்லாத சர்ச்சைதான். வெள்ளை நிறம் அல்லது கிரீம் நிறத்தில் சாக்ஸ் அணிந்தால் என்ன பிரச்சினை? ஐபிஎலில் திக்வேஷ் ராதி செய்ததுபோல், தற்போது ஷுப்மன் கில்லும் வம்புக்கு செய்வதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
கடைசியாக, 2021ஆம் ஆண்டில், இந்திய அணி லீட்ஸில் விளையாடியபோது, முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களை மட்டும் எடுத்து, இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், தற்போது இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.