No products in the cart.
நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு!
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விசாரணையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திரை உலக பிரபலங்கள் பலர் மீது பொலிஸாரின் சந்தேக பார்வை வீச தொடங்கி இருக்கிறது. இதையடுத்து திரை உலகில் பலர் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.
போதைப் பொருள் சப்ளை செய்ததாக கைதான பிரதீப் வாக்குமூலத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு விநியோகம் செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர பொலிஸார் திட்டமிட்டனர். இதற்காக கிருஷ்ணாவுக்கு நேற்று பொலிஸார் சம்மன் அனுப்பினர். அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருக்கிறது. இதனால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சைபர் கிரைம் நிபுணர்கள் மூலம் அவர் இடத்தை கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணா மீது கைது நடவடிக்கை பாயும் எனவும் பொலிஸார் தகவல் கொடுத்துள்ளனர்.