No products in the cart.
கந்தானை துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்கள்
கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (3) காலை 10 மணியளவில் கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத இருவர் T-56 ரக துப்பாக்கியால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த இரண்டு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹார எனவும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்த போதிலும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் உபாலி அமுனுவில எனவும், அவர் சமீர மனஹாரவின் மைத்துனர் என்றும் கூறப்படுகிறது.
இருவரும் உடற் பயிற்சி நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்களது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் வைத்து இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் கந்தானை பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.