No products in the cart.
வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் சடலம்
மீகொட, ஆட்டிகல வீதி பகுதியில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (13) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் சடலம் நேற்று (12) இரவு பாதுக்கை, வட்டரெக்க, சோமரத்தன மாவத்தையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இறுதிச் சடங்குகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதுடைய ‘பனா மந்திரி’ எனப்படும் சாந்த முதுன்கொட்டுவ கொல்லப்பட்டார்.
அவர் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பல கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், காணி கொள்வனவு, விற்பனை மற்றும் கட்டுமானத் துறைகளில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
காணி பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், அவர் சில நாட்களுக்கு முன்பு மீகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் ‘கங்கன’ என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் மைத்துனர் என்றும், அவர் லலித் கன்னங்கர என்ற ‘பாஸ் லலித்’ பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தி பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.
இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடந்த பின்னர் விரைந்து செயல்பட்ட பொலிஸார், வீதித் தடைகளைப் பயன்படுத்தி போக்குவரத்துச் சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது, தலங்கம, பாலம்துன சந்திப் பகுதியில் துப்பாக்கிச் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் பயணித்த கார் மற்றும் அதன் சாரதி, சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றினர்.
பின்னர், சம்பந்தப்பட்ட சாரதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மற்றொரு நபரும் நேற்று மதியம் தலங்கம, பாலம்துன சந்திக்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அனுமதி கோர உள்ளனர்.