No products in the cart.
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் வாள் வெட்டு
நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவான நேற்றைய தினம் (16) ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
அந்நிலையில், கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில், பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியது.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் , தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடாத்த முற்பட்டனர்.
இந்நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை மீட்டு நோயாளர் காவு வண்டியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போதும், வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.