No products in the cart.
விஜய்யின் கட்சி புது வியூகம்?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க புது வியூகத்தை வகுத்து இருக்கிறார்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் விஜய் இந்த கூட்டணிகளில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க அவர் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசிலும் கோரிக்கை உள்ளது. அதற்காக சிலர் டெல்லியிலும் காய்களை நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் வாக்கு திருட்டை கண்டித்து ராகுல் காந்தி பிரசார பயணம் செய்து வருகிறார். 16 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை கலந்து கொள்ள காங்கிரஸ் அழைத்துள்ளது.
காங்கிரசை ஆதரிக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காங்கிரசுடன் கைகோர்க்கும் முயற்சியில் விஜய் இறங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கூட்டணி தொடர்பாக சில சிறிய கட்சிகளுடன் விஜய் பேசி வருகிறார். அந்த வகையில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் வலுவான கூட்டணியாக இருக்கும் என்று கருதுகிறார். இதற்காக ராகுலை சந்தித்து பேச விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கு ஒரு முன்னோட்டமாக ராகுலின் பீகார் பிரசார பேரணியில் கலந்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்.
விஜய் பா.ஜ.க.வை எதிர்ப்பவர். ராகுலும் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தை தான் மேற்கொண்டுள்ளார். எனவே அந்த பிரசார பேரணியில் பங்கேற்பது தமிழக வெற்றி கழகத்துக்கு பலன் அளிப்பதாகவே இருக்கும் என்று விஜய் நம்புகிறார். அது மட்டுமல்ல இந்த பேரணியில் பங்கேற்பதன் மூலம் ராகுலுடனான சந்திப்பு எளிதாகும். அதைத் தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சை தொடங்கவும் வாய்ப்பாக இருக்கும் என்று கருதுவதாக கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த நகர்வு தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று கூறும் காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது,
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாதிரி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மிகப்பெரிய மோசடியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் முயற்சியை ராகுல் மேற்கொண்டுள்ளார். நாட்டை காக்கும் இந்த போராட்டத்தை ஆதரிக்கும் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கும்.
இதை வைத்து கூட்டணி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.