No products in the cart.
ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!
ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மூன்று நீதியர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்ட போது, சிரேஸ்ட அரச சட்டத்தரணி இதனை அறியப்படுத்தியுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி நயநதாரா பாலபட்டபெந்தி, குறித்த வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மனுவின் முன்னேற்றம் குறித்து அறிவிக்க மற்றொரு திகதியில் அழைக்கப்பட வேண்டும் என்றும் அரச சட்டத்தரணி கோரினார்.
அதன்படி, குறித்த மனுவை ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஆண்கள் மட்டுமே பொருத்தமான பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இதன் ஊடாக தகுதிவாய்ந்த பெண்கள் அந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் உள்ள வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், பெண்களும் விண்ணப்பிக்கும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பைத் திருத்துமாறு பிரதிவாதியான ரயில்வே திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம், கோரிக்கை விடுத்துள்ளனர்.