No products in the cart.
அனர்த்தத்திற்கு பின்னரான தேவை மதிப்பீடு குறித்து விசேட கலந்துரையாடல்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜெயசேகர தலைமையில், அனர்த்தத்திற்கு பின்னரான தேவை மதிப்பீடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய கொள்கை திட்டமிடல் திணைக்களம் மற்றும் ஏனைய தேசிய மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்களின் ஒத்துழைப்புடன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இந்த அனர்த்தத்திற்கு பின்னரான தேவை மதிப்பீட்டுச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், கடந்த அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பௌதீக ரீதியான சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்த தரவுகளை முறைப்படி சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை இந்தச் செயற்பாடு உள்ளடக்கியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை, அவர்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்திய ‘டித்வா’ (Dithwa) புயலின் பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள அடிப்படைத் தேவைகளை மதிப்பீடு செய்யவும், அது தொடர்பான தரவுகளை முன்வைக்கவும், தெளிவுபடுத்தவும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
உடனடி நிவாரணப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் நீண்டகால மீள் கட்டுமானப் பணிகளை முறையாக முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக இந்த மதிப்பீட்டுச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், Rebuilding Sri Lanka ஜனாதிபதி செயலணித் திட்டத்திற்கு இணையாக, வலுவான மீட்புச் செயற்பாடு ஒன்றைத் தயாரிப்பதற்காக இந்த மதிப்பீடு முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இந்தச் செயலணியானது எட்டு உபக் குழுக்களைக் கொண்டுள்ளதுடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் தலைமையிலான அனர்த்தத்திற்கு பின்னரான தேவை மதிப்பீட்டுக் குழுவானது ஏனைய குழுக்களை மேற்பார்வை செய்யும் பிரதான குழுவாகச் செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைந்துகொள்வதற்காக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்குழு விரிவாகக் கலந்துரையாடியது.
ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல், மீட்புத் தேவைகளை மதிப்பீடு செய்தல், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகச் சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க வேண்டிய ஒத்துழைப்பின் தன்மை மற்றும் அதன் போது ஏற்படக்கூடிய ஒருங்கிணைப்பு சவால்கள் குறித்து இங்கு பிரதானமாக ஆலோசிக்கப்பட்டது.
தேசிய ரீதியில் இயற்கை அனர்த்த அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அத்தகைய அனர்த்த நிலைமைகளைத் தாங்கிக்கொள்ளக்கூடிய நிலையான மீட்புத் திட்டத்தைத் தயாரிக்கும் வகையில், அனர்த்தத்திற்கு பின்னரான தேவை மதிப்பீட்டுச் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாகப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இக்கலந்துரையாடல் நிறைவுற்றது.















