இலங்கை

திவுலபத்தான கிராம விவகாரம்: முறையான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் வசிக்கும் மற்றும் மகாவலி அதிகார சபையின் கீழ் உள்ள திவுலபத்தான கிராமவாசிகளை வெளியேற்றுவதற்கு முன்னர், அது குறித்து முறையான விசாரணையை நடத்தி அவர்களுக்கு தகுந்த நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 

குறித்த கிராமவாசிகளை வெளியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெங்கமுவே நாலக தேரர் மற்றும் கிராமவாசிகள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரூ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 

இந்த மனு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அங்கு விடயங்களை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரூ, இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி கிராமத்தின் ஆரம்பகால குடியிருப்பாளர்களை அடையாளம் காணவும், அவர்களுக்கு மாற்று நிலங்களை வழங்க அல்லது இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இதன்போது மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனிஷ்க வித்தாரண, இந்த விசாரணை முடியும் வரை கிராமவாசிகள் தற்போதுள்ள இடத்திலேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறும், அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் நீதிமன்றில் கேட்டுக்கொண்டார். 

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், இரு தரப்பினரின் உடன்பாட்டுடன் மனு மீதான விசாரணையை நிறைவு செய்ய தீர்மானித்தது. 

அத்துடன், முறையான விசாரணைக்குப் பின்னரும் உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த வழக்கை ஒரு பிரேரணையின் (Motion) ஊடாக மீண்டும் அழைக்க முடியும் எனவும் நீதியரசர்கள் குழாம் மனுதாரர் தரப்பிற்கு அறிவித்தது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…