இலங்கை

வாகனக் காப்புறுதி அட்டைகளில் புதியஅறிவிப்பு

மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்பீட்டு அட்டைகளை வழங்குவது தொடர்பாக பொலிஸாரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.


இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் காப்புறுதித் துறையின் ஏனைய பங்குதாரர்கள் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய, காப்புறுதி நிறுவனங்களால் காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக இவ்வாறு டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்பீட்டு அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


அதன்படி, ‘தேசிய காப்புறுதிச் சரிபார்ப்பு அமைப்பு’ (National Insurance Verification System) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனைப் பின்வரும் முறைகள் மூலம் அணுக முடியும். இதன் மூலம் மோட்டார் வாகனக் காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மையைச் சரிபார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது:


*i). USSD குறியீடு: 1338# ஊடாகப் பின்வரும் படிகளைப் பின்பற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது:


ஏதேனும் ஒரு மொபைல் தொலைபேசி இணைப்பு மூலம் *1338# என்ற எண்ணை அழைத்தல்.


வாகன இலக்கம் அல்லது காப்புறுதிச் சான்றிதழ் இலக்கத்தை உள்ளீடு செய்தல்.


தொடர்புடைய காப்புறுதிப் பத்திரத்தின் தற்போதைய நிலையை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ii). SMS: 1338 குறுஞ்செய்தி சேவை:


ஏதேனும் ஒரு மொபைல் தொலைபேசி மூலம் வாகன இலக்கம் அல்லது காப்புறுதிப் பத்திர இலக்கத்தை குறுஞ்செய்தி ஊடாக 1338 என்ற எண்ணிற்கு அனுப்ப முடியும்.


அப்போது காப்புறுதிப் பத்திரம் செல்லுபடியாக உள்ளதா என்பதை ஒரு குறுஞ்செய்தி மூலம் உடனடியாகப் பதிலைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


iii). உடனடி தொலைபேசி இலக்கமான 1338 என்ற எண்ணிற்கு அழைத்தல்:


அழைப்பை ஏற்படுத்திய பின்னர் கிடைக்கும் அறிவுறுத்தல்களின்படி தொடர்புடைய காப்புறுதி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


அப்போது தொடர்புடைய காப்புறுதி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிற்கு அது இணைக்கப்படும்.


தொடர்புடைய காப்புறுதி நிறுவனத்திற்கு காப்புறுதிப் பத்திர இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை வழங்கவும்.


அவர்களால் காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மை உறுதிப்படுத்தப்படும்.


*1338# மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு வாகன இலக்கத்தை உள்ளிடும்போது, வாகன இலக்கத்தின் ஆரம்ப எழுத்துக்கள் அல்லது எண்கள், ஒரு சிறுகோடு, நான்கு இலக்கங்களைக் கொண்ட எண்ணை உள்ளிட வேண்டும்.


வாகன இலக்கத்தை உள்ளிடும்போது எழுத்துக்கள் அல்லது எண்களுக்கு இடையில் இடைவெளி விடக்கூடாது.


ஏதேனும் ஒரு மோட்டார் வாகனத்தின் இலக்கம் “ஸ்ரீ”  எனக் காணப்படும்போது, அந்த எழுத்தை “SRI” என ஆங்கில மொழியில் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேற்கூறிய முறைகள் மூலம் மோட்டார் வாகனமொன்றின் காப்புறுதியைச் சரிபார்க்கும் தருணத்தில் அது செல்லுபடியாக உள்ளதா இல்லையா என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும் என்பதுடன், குறுஞ்செய்திச் சேவை மூலம் மிகவும் எளிதாக இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


1338 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு எடுக்கப்படும் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளுக்காகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


காப்புறுதி நிறுவனங்களால் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை வழங்குவது ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்காலிக காப்புறுதி ஆவணங்களை வழங்குவது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.


எதிர்காலத்தில் தற்காலிக காப்புறுதி ஆவணங்களை வழங்குவதை நிறுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், அதுவரை தற்காலிக காப்புறுதி ஆவணங்கள் முன்னரைப் போலவே செல்லுபடியாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மே 01 ஆம் திகதி முதல் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் மாத்திரம் வழங்கப்பட்டாலும், இதுவரையில் வழங்கப்பட்டுள்ள காப்புறுதி அட்டைகள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை செல்லுபடியாகும்.


ஏதேனும் ஒரு சாரதியால் டிஜிட்டல் காப்பீட்டு அட்டையைச் சமர்ப்பிக்க முடியாத சந்தர்ப்பத்தில், டிஜிட்டல் காப்புறுதி அட்டையின் அச்சிடப்பட்ட நிழற்படப் பிரதியைச் சமர்ப்பிக்கும் போது, குறுகிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தியோ அல்லது குறுஞ்செய்திச் சேவை மூலமோ அந்தப் பாதுகாப்பின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.


2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் II ஆம் அத்தியாயத்தின் 3 ஆம் பிரிவின்படி, இந்த டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்வது, அதன் தாக்கம் அல்லது செல்லுபடியாகும் தன்மையை இழக்கச் செய்ய முடியாது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…