No products in the cart.
அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம்: எஸ்.ஐ இடமாற்றம்
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த குழுவிற்கு பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், காலி திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு வெளியே கடமையாற்றும் உயர் பொலிஸ் அதிகாரியொருவரின் தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியொன்றில், கைது செய்யப்பட்டுள்ள தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறி நபரொருவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் அமைதியின்மையில் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது.
குறித்த காணொளியில் தந்தை எனக் குறிப்பிடப்பட்டுள்ள முதியவர், கடந்த 24 ஆம் திகதி இரவு மதுபோதையில் வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமையால் அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அதன்போது கீழே விழுந்ததில் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வெளியேறியமை காணொளிக் காட்சிகளில் தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இருப்பினும், குறித்த நபர் நேற்று (25) அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து, சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர் பலப்பிட்டிய மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட விசாரணையின் முடிவுகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.














