வணிகம்

கொமர்ஷல் வங்கி இரண்டாவது விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டத்திற்காக கிழக்கு நோக்கி வவுணதீவுக்குச் செல்கிறது

கொமர்ஷல் வங்கியானது அண்மையில் கிளிநொச்சியின் மகிழங்காட்டில் மேற்கொண்ட முன்னோடி விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுணதீவை இலங்கையில் அதன் இரண்டாவது ‘விவசாய நவீனமயமாக்கல் கிராமமாக’ தேர்ந்தெடுத்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கிராமத் திட்டமானது, கிராமங்களில் விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தைப் பரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு இலட்சியப் பணியாக திகழ்வதுடன் இது, நாட்டிலுள்ள விவசாயத்திற்கான அனைத்து திறன்களையும் உள்ளடக்கியது. நாற்று நடவுதல், ட்ரோன் பயன்பாடு மற்றும் காலநிலைக்கு ஏற்ற பயிர் வகைகளை நடுதல் போன்ற மேம்பட்ட நுட்பங்களை அணுகுவதை எளிதாக்குகிறது.

அத்துடன் இது உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை அதிகரிக்கும்; மேலும் இந்த நவீன மய திட்டமானது திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி; வங்கியுடன் நேரடி ஈடுபாட்டின் மூலம் நிதி உள்ளடக்கம் மற்றும் கடன் அணுகல்; சிறந்த விளைச்சல் மற்றும் புதிய சந்தைகளுக்கான அணுகல் மூலம் மேம்பட்ட வாழ்வாதாரங்கள்; விவசாய நிலங்களின் நீண்டகால நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நிலையான நடைமுறைகள்; மற்றும் சமூக ஆதரவு மற்றும் வலையமைப்பு ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

கொமர்ஷல் வங்கியானது வவுணதீவில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கல்வி மற்றும் விவசாய நிறுவனங்களுடனான ஒத்துழைப்பானது மதிப்புமிக்க அறிவுப் பகிர்வு சூழலை வளர்ப்பதாக வங்கி தெரிவித்துள்ளது.

வவுணதீவில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக இயந்திரங்களைப் பயன்படுத்தி நெல் நாற்றுகளை நடவு செய்வது தொடர்பான பயிற்சி அமர்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் வவுணதீவு விவசாயிகள் அமைப்பின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்புப் பகுதி விவசாய நிபுணர்கள் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளீதரன்; விவசாயத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திரு. எம். பரமேஸ்வரன்; கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் டி. கிரிதரன்; விவசாயத் துறையின் மேலதிக பணிப்பாளர் திருமதி ஏ. காயத்ரி; மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி என். சத்தியானந்தி ஆகியோர் அடங்குவர். மேலும் கொமர்ஷல் வங்கியின் சிரேஷ்ட பிரதிநிதிகளில் வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் திரு. டி. கஜரூபன் மற்றும்அபிவிருத்திக் கடன் திணைக்களத்தின் முகாமையாளர் திரு. டபிள்யூ. டி. சி. லசந்த ஆகியோர் அடங்குவர்.

பாரம்பரிய விவசாய முறைகள் மற்றும் விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் புதுமையான தொழில்நுட்பங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும், அடுத்த தலைமுறையினரை புத்திசாலித்தனமான விவசாய நடைமுறைகளை மேற்கொள்வதற்கு அறிவூட்டுவதற்கும், தூண்டுவதற்கும் இந்த வகையான நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…