No products in the cart.
கைகுலுக்க வேண்டாம் – இந்திய மகளிர் அணிக்கு ஆலோசனை
பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என இந்திய மகளிர் அணிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளிர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது. லீக் போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை மறுதினம் மோதவுள்ளன.
இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய மகளிர் அணி நேற்று மாலை இலங்கைக்கு வந்தது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் அரசியல் பதற்றம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்த அரசியல் பதற்றம் இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.
இதன்படி, அண்மையில் நடந்து முடிந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் முழுவதும் இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கிக்கொள்ளவில்லை.
மேலும், இருநாட்டு வீரர்களும் மோசமான சைகைகள் மூலம் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டனர்.
எல்லாவற்றுக்கும் மோலக இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினர், பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கிண்ணத்தை வாங்க மறுத்திருந்தமை விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையிலேயே, இந்திய மகளிர் அணிக்கு கைகுலுக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் சபை, வீராங்கனைகள் மற்றும் துணை ஊழியர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.