No products in the cart.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனம் குறித்து நாளை பாராளுமன்றில் விவாதம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றம் தலையிடுவது பற்றிய எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை நாளை (10) பி.ப. 3.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 19(2) இன் பிரகாரம் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருத்தி, இது தொடர்பான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று (08) சபாநாயகருக்கு சபையில் எழுத்துமூலம் சமர்ப்பித்தார்.
அதனையடுத்து, இது தொடர்பில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க நேற்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்ததை அடுத்து நிலையியற் கட்டளை 19(2) இன் பிரகாரம் இருபதுக்கு குறையாத உறுப்பினர்கள் எழுந்து நின்று அந்தப் பிரேரணையை ஆதரித்ததுடன், அதற்கமைய சபாநாயகர் அது சம்பந்தமான அனுமதியை வழங்கினார்.
அதற்கமைய, நாளை (10) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த 8 தனியார் உறுப்பினர் பிரேரணைகளில் 7 பிரேரணைகள் மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 3.30 மணி வரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பினர் இணைந்து இணங்கிக் கொண்டனர்.
















