இலங்கை

பல அரச நிறுவனங்களின் இணையவழி சேவைகள் பாதிப்பு

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் வழங்கப்படும் இணையவழி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. 

பாதிக்கப்பட்ட சேவைகளில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (BMD) சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணம் தவிர்ந்த) இணையவழி வருமான வரி அனுமதிப் பத்திர முறைமை (eRL 2.0), பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு, வர்த்தகத் திணைக்களத்தின் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டுக்கான சான்றிதழ் வழங்கும் இணையவழி அமைப்பு, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதியக் கட்டமைப்பு, இ-உள்ளூராட்சி அமைப்பு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம், இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இணையத்தளங்களும் அடங்குகின்றன.

 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) பொறியியலாளர்களும் சேவை வழங்குநர்களும், இந்த கிளவுட் சேவைகளை விரைவில் வழமைக்குக் கொண்டு வருவதற்காகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர். 

இதேவேளை, சான்றிதழ் பிரதிகளை, சம்பந்தப்பட்ட மூலச் சான்றிதழ்களை வழங்கிய பிரதேச செயலகத்திலிருந்து, தகவல் முறைமைகளின் உதவியின்றி (Manually) பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர் நிறுவனங்களுக்கும், கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் தொடர்பான முன்னேற்றம் குறித்து உரிய முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

LGC சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர உயர் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட LGC விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தற்போதுள்ள கொள்ளளவு மற்றும் செயற்பாட்டு மட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுமக்களுக்கும் LGC சேவையைப் பெறும் நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 

அத்துடன், இணையவழிச் சேவைகளை விரைவில் முழுமையாக வழமைக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என மீண்டும் உறுதியளிக்கிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…