No products in the cart.
உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு
தேவேந்திரமுனையில் இருந்து கடலுக்குச் சென்று விபத்துக்குள்ளாகி உயிர் பிழைத்த நான்கு மீனவர்களும் 13 நாட்களுக்குப் பிறகு, இன்று (31) அதிகாலை 5.00 மணியளவில் கடற்படையினரால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆறு மீனவர்களுடன் நெடுநாள் படகு கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றது.
பின்னர், கடந்த 16 ஆம் திகதி முதல் அந்த மீன்பிடிப் படகு காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் அறிவித்ததாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மீன்பிடிப் படகு இலங்கையின் தென்கிழக்கு கடல் கடற்பரப்பில் சுமார் 300 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
படகிலிருந்த 6 மீனவர்களில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதுடன், மற்றுமொருவர் சுமார் 11 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளான படகில் இருந்த நான்கு மீனவர்களை இந்தோனேசிய மீன்பிடிப் படகு ஒன்று காப்பாற்றியதாக கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றை கடற்படை அனுப்பி வைத்தது.
விபத்துக்குள்ளான படகில் இருந்த நான்கு மீனவர்கள், குறித்த மீன்பிடிக் கப்பலுக்கு அருகில் சென்ற ஒரு வணிகக் கப்பலால் இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர்.
பின்னர், தகவல் பரிமாற்றங்கள் மூலம் இலங்கை கடற்படையின் சிதுரல கப்பலின் கெப்டன் மகேஷ் குலசிறிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வர்த்தகக் கப்பலினால் அழைத்து வரப்பட்ட மீனவர்களைப் பொறுப்பேற்பதற்காக விசேட கடற்படைக் குழுவொன்று நேற்று (30) அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட நான்கு மீனவர்களும் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இரண்டு மீனவர்கள் பலவீனமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மீனவர்களில் ஒருவர் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.டீ.ஆர். நவோதன என்றும், மற்றையவர் தேவேந்திரமுனை பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எச்.ஏ.டீ. சுரங்க என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிர் பிழைத்தவர்கள் போஷித நிமந்த, ஷானக்க அமில, ஓஷான் மதுசங்க, தம்மிக லக்மால் ஆகிய நான்கு பேர் ஆவர்.
உயிரிழந்த மீனவர்களின் உடல்களைப் பொறுப்பேற்க இந்தோனேசிய கப்பல் விரும்பாததால், அந்த உடல்கள் கடலில் விடப்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
குறித்த மீனவர்கள் சுமார் 13 நாட்களாக கடலில் மிதந்து கொண்டிருந்ததாக சிதுரல கப்பலின் கேப்டன் மகேஷ் குலசிறி தெரிவித்தார்.















