இலங்கை

அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக் காவல்

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

இச்சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (16) பிற்பகல் கொட்டாவையில் வைத்து மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 

எவ்வாறாயினும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ‘கரந்தெனிய சுத்தாவின் ஆலோசனையின் பேரில் டுபாய் நிபுண மற்றும் மல்வானை டுடூ (Tutu) ஆகியோரே இந்தக் கொலையை நெறிப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. 

இதற்கிடையில், குறித்த சகோதரர்கள் இருவரும் அக்குரேகொடவில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றின் அருகில் காத்திருந்த துப்பாக்கிதாரிகளுக்குத் துப்பாக்கிகளை வழங்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன. 

அதில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவர், தாங்கள் வந்த காரிலிருந்து ஒரு பையை எடுத்து வந்து துப்பாக்கிதாரிகள் இருந்த காரில் கொடுப்பது பதிவாகியுள்ளது. 

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஹோக்கந்தர திசையை நோக்கிச் செல்வதும் அதில் காணப்படுகிறது. 

அந்த நேரத்தில் குறித்த சட்டத்தரணியும் அந்தப் பாதை வழியாக வந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் அது குறித்துத் துப்பாக்கிதாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

தலங்கம, அக்குரேகொடவில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் வாகன தரிப்பிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். 

பின்னர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகப் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனையின் பேரில் 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…