No products in the cart.
போர் பதற்றம் – வீரர்களின் பயண பாதுகாப்பு குறித்து ஐசிசி அவதானம்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலையினை உன்னிப்பாகக் அவதானித்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
2026 டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் பயணம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான அவசரக்காலத் திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் பல நாடுகளின் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளன.
இது சர்வதேச விமானப் போக்குவரத்தைப் பாதித்துள்ள நிலையில், பல விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இரத்து செய்துள்ளதுடன் வேறு பாதையில் திருப்பிவிட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய கிழக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையானது இந்த தொடரை நடத்துவதில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், வீரர்கள், அணி நிர்வாகம், போட்டி அதிகாரிகள், ஒளிபரப்புக் குழுவினர் மற்றும் ஏனைய பணியாளர்கள் எனப் பெருமளவிலானோர் தமது பணிகளை முடித்து நாடு திரும்புவதற்கு டுபாய் போன்ற வளைகுடா நாடுகளின் விமான நிலையங்களையே பிரதான போக்குவரத்து மையங்களாகப் பயன்படுத்துகின்றனர்.
ஐசிசியின் பயண மற்றும் போக்குவரத்துப் பிரிவு, சர்வதேச விமான நிறுவனங்களுடன் இணைந்து ஐரோப்பா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய விமான நிலையங்கள் ஊடாக மாற்றுப் பயண வழிகளை கண்டறியும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பிரத்யேக பயண உதவி மையமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.















