இலங்கை

அரசை முடக்கவே வைத்தியர்கள் வேலைநிறுத்தம்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது எந்தவித நியாயமான காரணங்களும் அற்ற, குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட ஒரு செயல் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த வேலைநிறுத்தத்திற்கு அடிப்படையாகக் கூறப்படும் பயிற்சி வைத்தியர்களின் நியமன விவகாரம் ஏற்கனவே முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிட்டது.

பயிற்சி முடித்த வைத்தியர்களில் 96.25 சதவீதமானோர் அரச சேவையில் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். எஞ்சியிருந்த மிகச்சிலரும் ஏற்கனவே தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில், தீர்க்கப்பட்ட ஒரு விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து நோயாளிகளைப் பணயக்கைதிகளாக்குவது எவ்வகையிலும் நியாயமற்றது. பொதுமக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வி கற்று, வைத்தியர்களாக உருவானவர்கள் அதே மக்களுக்குச் சேவை செய்ய மறுப்பது பாரிய அநீதியாகும்.

நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுகாதார சேவையைத் தடையின்றி வழங்க முயன்று வரும் வேளையில், இவ்வாறான போராட்டங்கள் தேவையற்ற குழப்பங்களையே விளைவிக்கும்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக மீண்டும் ஒரு வேலைநிறுத்தத்தை அறிவித்தமையானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றது.

இவர்களின் தற்போதைய தலைமைத்துவம் வைத்தியத் துறையின் கௌரவத்தையே சீர்குலைக்கின்றது.

பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையைப் புறக்கணித்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருவதை நாம் பாராட்டுகின்றோம்.

எனவே, வைத்தியர்கள் உடனடியாகத் தமது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறும், தேவையற்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குத் துணை போக வேண்டாம் என்றும் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…