கனடா

ஒன்றாரியோவில் இடம்பெற்ற கோர சம்பவம்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு தனித்தீவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படகுகள் மூலமாக மட்டுமே செல்லக்கூடிய ஒரு தொலைதூர ஏரியில் அமைந்துள்ள தீவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஒன்டாரியோவின் கிரேட்டர் சட்பரி பகுதிக்கு தென்மேற்கே அமைந்துள்ள ‘லிட்டில் கபோடின்’ ஏரியின் தீவொன்றில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து நிபிசிங் வெஸ்ட் ஒன்றாரியோ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த பகுதி மிகவும் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்ததால், அங்கு சாதாரண வாகனங்களில் செல்வது சாத்தியமில்லாமல் இருந்தது

இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஹெலிகாப்டர் உள்ளிட்ட சிறப்புப் படைகள் களமிறக்கப்பட்டன. பொலிஸ் வான்வழி சேவைகள், வடகிழக்கு பிராந்திய அவசரக்கால மீட்புக்குழு மற்றும் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இணைந்து இந்த மீட்புப் பணியை மேற்கொண்டன.

இந்த கொடூரத் தீ விபத்தில் சிக்கி, சட்பரி பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மற்றொரு இளைஞர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவர் உயிராபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து ஒன்டாரியோ தீயணைப்புத் துறை அதிகாரிகளின் உதவியுடன் மாகாண பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…