கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வு தமிழ் இளைஞர்கள் திரள்வு!

மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை (Mullivaikkal Remembrance Day) முன்னிட்டு, கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள மெல் லாஸ்ட்மேன் சதுக்கத்தில் (Mel Lastman Square) பிரம்மாண்ட நினைவு நாள் பொதுக்கூட்டம் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

கனடா நாடாளுமன்றத்தில் மே 18 ஆம் தேதியை “தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்” ஆக அங்கீகரித்துள்ள நிலையில், ஆண்டுதோறும் ஒன்டாரியோ மாகாணத்தில் மே 18 உடன் நிறைவடையும் வாரம் “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரமாக” (Tamil Genocide Education Week) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வில், புலம்பெயர்ந்து வாழும் பெருமளவிலான தமிழ் மக்கள், குறிப்பாக இரண்டாம் தலைமுறை தமிழ் இளைஞர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து தங்களின் ஒற்றுமையையும், நீதிக்கான குரலையும் பதிவு செய்தனர். நிகழ்வின் போது தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு இளைஞர்கள் குழுவாக இணைந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு தங்களின் வீரவணக்கத்தையும், அஞ்சலியையும் செலுத்தினர்.

நிகழ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் பல்லாயிரக்கணக்கானோரின் முன்னிலையில் நினைவேந்தல் உரைகளும், மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் கனடிய அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு, ஈழத் தமிழர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சர்வதேச அரங்கில் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

மேலும் தொடர்புடைய செய்திகள் –

பிராம்ப்டன்: மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை ஒட்டி, கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் அமைந்துள்ள சிங்குவா கூசி பூங்காவில் (Chinguacousy Park) அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழினப் படுகொலை நினைவுத் தூபியிலும் (Tamil Genocide Monument) பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழீழ தாயக வரைபட வடிவத்தைக் கொண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுத் தூபிக்கு முன்பாக குழுமிய தமிழ் இளைஞர்கள், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு சுடரேற்றி தங்களின் வீரவணக்கத்தைத் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதத்தில் இந்த நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெரும் திரளாக இங்கு இளைஞர்கள் ஒன்றுகூடியது, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் நீதிக்கான போராட்டமும், நினைவேந்தல் உரிமையும் எத்தகைய தடைகளையும் தாண்டி தொடரும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

Exit mobile version