இலங்கை

செப்டம்பர் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை

செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று (21) ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல வினாவுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.


கடைசியாக மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் நேரடி தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கே ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய நுகர்வோருக்காக 15 பில்லியன் ரூபா மானியத்தை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.


இது குறித்து மேலும் விளக்கமளித்த அமைச்சர், “டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மின்சாரக் கட்டணம் மேலும் உயருமா என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், இந்த விலை அதிகரிப்பின் நேரடி தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே உள்ளது என்பதை நாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். மற்றவர்களின் சுமையை அரசாங்கம் 15 பில்லியன் ரூபாவை மின்சார சபைக்கு வழங்கி தாங்கிக்கொண்டுள்ளது. என்னால் ஒரு நேரடிப் பதிலைச் சொல்ல முடியும். செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு நாம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்க உத்தேசிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…