உலகம்

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதைத் தொடர்ந்து புதிய பேச்சுவார்த்தை

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய சுற்று பேச்சுவார்த்தை இன்று (21) சுவிட்சர்லாந்தில் தொடங்கப்படவுள்ளது.


இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தரப்பில் பங்கேற்பதற்காக அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸ் சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார்.


எவ்வாறாயினும், இருதரப்பும் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறினால், ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு அமெரிக்கா கட்டணம் விதிக்கும் என டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மத்திய கிழக்கில் அமைதியற்ற சூழலை உருவாக்குவதுடன், ஈரான் நேற்று (20) பிற்பகல் முதல் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறி இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருவதே இதற்கு காரணமாகும்.


அமெரிக்காவும் ஈரானும் எட்டிய 14 அம்ச அமைதி உடன்படிக்கையின் முதல் நிபந்தனை, “அமெரிக்கா, ஈரான் மற்றும் போரின் பிற தரப்பினர் உடனடியாக ஒருவருக்கொருவர் எதிராகவும் லெபனானுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்பதாகும்.


அதன்படி, அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பர தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்த போதிலும், இந்த முடிவை ஏற்பதற்கு இஸ்ரேல் தயக்கம் காட்டியது.


பின்னர், கட்டார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலும் லெபனானும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்ட போதிலும், தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


இதன் காரணமாக, அனைத்து கடல்சார் போக்குவரத்துகளுக்காகவும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக ஈரானின் மத்திய இராணுவ கட்டளை தலைமையகம் அறிவித்துள்ளது.


மேலும், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் பயணிக்கும் கப்பல்கள் அதன் வழியாக செல்ல வேண்டாம் என்றும், உத்தரவை மீறி பயணிக்கும் கப்பல்கள் நீர்மூழ்கி குண்டுகள் அல்லது கடற்படையின் இலக்குகளுக்கு ஆளாக நேரிடலாம் என்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது.


எனினும், ஹோர்முஸ்  ஊடாக கடல்சார் போக்குவரத்து தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறி அமெரிக்க மத்திய கட்டளை இவ்வறிக்கையை நிராகரித்துள்ளது.


நேற்றைய நாளில் மாத்திரம் 55 வணிகக் கப்பல்கள் இச்சந்தியின் ஊடாகப் பயணித்துள்ளதுடன், 17 மில்லியனுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் பீப்பாய்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, அமெரிக்க தரப்பு தனது பொறுப்புகளை நிறைவேற்றாவிடில் ஈரான் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார்.


ஈரானிய ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த புதிய பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் பங்கேற்பதற்காக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாஃப் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரும் சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…