இலங்கை

காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை

நல்லூர் பிரதேச சபையின் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி, அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த நிலையத்தால், அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மருத்துவ, இலத்திரனியல், இரசாயன, பொலித்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரிக்காமல் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

அத்தோடு, தாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் துர்நாற்றத்தையே சுவாசித்து வருவதாகவும், நிலத்தடி நீரை சுத்தமாக குடிக்க முடியாமலும் நிம்மதியாக உறங்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாகவும் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்மைக் காலமாக இனந்தெரியாத நபர்கள் குறித்த கழிவுகளுக்கு இரவு நேரங்களில் தீ வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, இதனால் ஏற்படும் தீயை கட்டுப்படுத்த பிரதேச சபையினர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், தீயினால் ஏற்படும் புகையினால் அயல் மக்கள் பெரும் துன்பங்களையும் எதிர்கொண்டு வந்தனர்.

அவ்வாறான நிலையில் இதனை ஒரு பொதுத் தொல்லையாகவும் சூழல் மாசடையக்கூடிய வகையில் காணப்படுகின்றமை தொடர்பிலும் யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் மீதான விசாரணைகளை தொடர்ந்து, அப்பகுதியில் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும், அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, காரைக்காலில் உள்ள கழிவு தரம் பிரிக்கும் மையத்தை அப்பகுதியில் இருந்து அகற்றி, பிறிதொரு இடத்திற்கு அதனை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் , இனிவரும் காலங்களில் கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரித்தே கையளிக்க வேண்டும் எனவும், தரம் பிரிக்காத கழிவுகளை பிரதேச சபை சுகாதார தொழிலாளிகள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…