இலங்கை

அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்கள் நாட்டை அச்சுறுத்துவதாக சஜித் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று (14) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி புதிதாக தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில், அரசாங்கத்தின் பலவீனமான ஆட்சி, சட்டம் ஒழுங்கு மீறல்கள், மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் அதிகாரங்களை மக்கள் விடுதலை முன்னணி கைப்பற்றுவது குறித்து கடுமையாக விமர்சித்தார். 

நாட்டில் நாளாந்தம் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் மனிதக் கொலைகள் குறித்து சஜித் பிரேமதாச இதன்போது கவலை தெரிவித்தார். 

அவர் கூறுகையில், “கொலைகார கும்பல்கள், பாதாள உலகக் கும்பல்கள், போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான திட்டமோ செயல்பாடோ இல்லை” என்று குற்றஞ்சாட்டினார். 

மேலும், ஹோமாகம மீகொட பகுதியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தொகுதியிலேயே இத்தகைய குற்றங்கள் நடப்பதாகவும், அரசாங்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிவிட்டதாகவும் விமர்சித்தார். 

அரசாங்கம் சிவில் பாதுகாப்புக் குழுக்கள், ஊர்காவல் குழுக்கள், இளைஞர் கழகங்கள், விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள், மகளிர் சங்கங்கள், மரண உதவி சங்கங்கள், மற்றும் பரிபாலன சபைகளின் அதிகாரங்களை ஜே.வி.பி மூலம் அரசியல் மயமாக்கி, பலவந்தமாக கைப்பற்றுவதாக சஜித் குற்றஞ்சாட்டினார். 

“இதற்கு முன் இவ்வாறு அரசியல் மயமாக்கல் நடந்ததில்லை. இது ஜனநாயகத்தை அழிக்கும் எதோச்சதிகார முயற்சி” என்று அவர் கூறினார். மேலும், இத்தகைய செயல்கள் மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் முயற்சியாக உள்ளதாகவும், இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளதாகவும் வலியுறுத்தினார். 

சுற்றுலாத் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை வரவேற்ற சஜித், இத்துறையில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் எதிர்காலம் இருள்மயமாக உள்ளதாக கவலை தெரிவித்தார். 

அரசாங்கம் விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எளிதாக்குவதாகவும், இது உள்ளூர் சாரதிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் கூறினார். 

மேலும், வெளிநாட்டு சுற்றுலா நிறுவனங்கள் நாட்டில் தொழில் தொடங்குவதற்கு இது வழிவகுக்கும் என எச்சரித்தார். 

கொவிட் காலத்தில் கல்வித்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியை சுட்டிக்காட்டிய சஜித், 16,200 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ததாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் இவர்களை புறக்கணித்து, ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், இது மக்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அவர் கூறினார். 

ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே மக்களின் பிரச்சினைகளுக்கு உரத்த குரல் எழுப்புவதாகவும், ஓய்வூதியம் பெறுவோர், பட்டதாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முன்னின்று செயல்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், அரசாங்கத்தின் முட்டாள்தனமான முடிவுகள் நாட்டை மேலும் நெருக்கடியில் தள்ளுவதாகவும் விமர்சித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…